Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அரசு மருத்துவர்களின் தரமான சம்பவம்!

அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுழிப்பதும், அங்கே நம்மால் சமாளிக்க முடியாது, நமக்கெல்லாம் அது சரியா வராது என்றும் இன்றளவிலும் பல மக்கள் மனிதில் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

இது உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது.
அரசு மருத்துவமனைகளின் கடைநிலை ஊழியரில் துவங்கி ஒரு சில மருத்துவர்கள் வரை இப்படி மக்கள் நினைப்பதற்குக் காரணமாகவும் நடந்து கொள்ளத் தான் செய்கின்றனர்.

தான் அரசு வேலையில் இருப்பதால் ஒரு திமிரான நடைமுறை, ஓசியல மருத்துவம் பாக்க வந்த உனக்கென்ன மரியாதை என்ற எண்ணம், இப்படி பல ஊழியர்களின் அலட்சியப் போக்கும், லஞ்சம் வாங்கிப் பணம் சம்பாதிக்கலாம் என்ற அவர்களின் எண்ணமும் தான் அரசு மருத்துவமனைகளின் இந்த அவல நிலைக்குக் காரணம்.

ஆனால் மருத்துவக் கல்வி என்றால் எல்லாரும் நாடுவது, அரசு மருத்துவக் கல்லூரிகளை தான்.
நமநு நாட்டின் பெரும்பாலான தரமான மருத்துவர்களை உருவாக்கியிருப்பது அரசு மருத்துவக் கல்லூரிகள் தான்.

கத்திக் குத்து வாங்கும் அளவிற்கு அரசு மருத்துவர்களில் சிலர் தன் கடமையைச் செய்யாமல் மக்களை அலைக்கழிப்பது ஒரு புறம் இருந்தாலும், பல நேரங்களில் மருத்துவத் துறையில் மைல் கல்லாக சில சாதனைகளையும் செய்து தான் வருகின்றனர்.

அப்படி ஒரு செய்தியைக் காண நேர்ந்தது இன்று.

ஒரு உடல் பருமனான பெண், அதாவது 156 கிலோ எடை உள்ள ஒரு பெண்ணுக்கு, அவர் எதிர்கொண்ட பல்வேறு மருத்துவ சிக்கல்களைத் தாண்டி, பிரசவித்த சாதனை தான் அரசு மருத்துவர்கள் செய்த சாதனை.

சாதாரண எடையுள்ள பெண்ணுக்கே பிரசவத்தின் போது பல்வேறு சிக்கல்கள் வரும். அப்படியிருக்க, உடல் எடை அதிகமுள்ள பெண்ணுக்கு சொல்லவா வேண்டும்?

தீவிர சுவாசத் தொற்று , பேறு கால உயர் இரத்த அழுத்தம், பேறுகால சர்க்கரை நோய் , தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினைகள் அவருக்கு இருந்திருக்கிறது.

குறிப்பாக படுக்கும் போது சுவாசிக்க இயலாமல் போவதாகவும், உட்கார்ந்த நிலையிலேயே தூங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது மட்டும் போதாது என்று மூளையில் இரத்தம் உறைவு, தைராய்டு சுரப்பிக் குறைபாடுகள் ஆகியவையும் இருந்திருக்கின்றன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறிய பின்பு, 32 வார காலத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவமும் செய்து , தாயையும் , சேயையும் காப்பாற்றி இருக்கின்றனர்

அறுவை சிகிச்சை மிக எளிதாக நிகழ்ந்து விடவில்லை.அந்தப் பெண்ணை முழுமையாகப் படுக்க வைக்கவோ மயக்க மருந்து செலுத்தவோ முடியாத சூழலில் சாதுரியமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்திருக்கிறார்கள்.

பிறகு கஸ்தூரிபா மருத்துவமனையில் சில நாட்கள் கண்காணிப்பில் இருந்துவிட்டு நலமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.

இவர், செயற்கைக் கருத்தரித்தல் மூலமாக ஒரு தனியார் கருத்தரிப்பு மருத்துமனையின் உதவியுடன் கருவுற்றிருக்கிறார்.

இப்படியான பல செயற்கைக் கருத்தரிப்பு மையங்களும், கருத்தரித்தல் வரை மட்டும் செய்து விட்டு, பல லட்சங்களை வாங்கிவிட்டு, வெளியே சென்று பிரசவம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுகிறார்கள்.
சில மையங்களில் பிரசவமும் பார்க்கிறார்கள், ஆனால் அதற்கும் மக்களிடம் பணத்தைக் கறந்து விடுகிறார்கள்.

இப்படியான உடல் கட்டமைப்பு கொண்ட பெண்ணுக்கு செயற்கைக் கருவூட்டல் செய்தால் பிரசவத்தின் போது என்னவெல்லாம் பிரச்சினை வரும் என்பது கூடத் தெரியாமல் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இப்படி கருவூட்டல் செய்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.

மருத்துவ உலகில் மருந்து , மாத்திரைகள், மருத்துவம் என்று ஒரு புறம் சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்க, புற்றீசல் போல செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் இன்னொரு புறம் மக்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா நேரத்தில் அரசு மருத்துமனைகள் மக்களுக்கு ஏற்ற மனநிறைவான சேவையைத் தருமாயின், மருத்துவ மாஃபியா ஒழியும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.