பணம்.
இன்றைய நிலையில் உலகில் வாழும் அத்தனை ஆறறிவு மிருகங்கள் அனைவருக்கும் அடிப்படை நாதமே பணம் தான்.
வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்லாத குரங்கு இல்லை என்பதைப்போல, பணம் வேண்டாம், பணம் தேவையில்லை என்று சொல்லும் மனிதர்கள் இங்கு இல்லவே இல்லை என்பது தான் எழுதப்படாத உண்மை.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், மறதி வியாதி உள்ளவர்களும், 100 ல்0.00001 சதவீத வித்தியாசமான மனிதர்களைத் தவிர்த்து மீதி அனைவருமே பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடக்காரணம், உணவு , உடை , இருப்பிடம் என்ற அனைத்திற்குமே பணம் தான் பிராதனம் என்று ஆகி விட்டது.
கடவுளைக்கூட பணம் இருப்பவர்கள் ஒரு மாதிரியாகவும்,பணம் இல்லாதவர்கள் வேறு மாதிரியாகவும் பார்ப்பது கடவுளின் தவறல்ல.
மனிதன் செய்து வைத்த சதி.
இப்படி பணம் பணம் என்று உலகமே பணத்திற்காக அலையும் போது அதை நல்ல வழியில் உழைத்து மட்டுமே சம்பாதிக்க முடியும் , சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பல தில்லு முல்லு வேலைகளையும் செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது.
உலகம் டிஜிட்டல் மயமாகும் முன்பு வீடு புகுந்து கதவுகளை உடைத்துத் திருடிக்கொண்டிருந்த திருடர்கள் கூட்டம் இருந்தது. இன்றும் ஒரு சில பேர் அது மாதிரி இருந்தாலும் கூட, இன்றைய டிஜிட்டல் உலகில் இணையவழியில் மக்களை டிஜிட்டலாக ஏமாற்றுவது அதிகமாகி விட்டது.
உதாரணமாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது, கைது செய்து விட்டோம் என று சொல்லி மோசடி செய்து ஏமாற்றுவது போன்ற பல விஷயங்களை நாளுக்கு நாள் நாம் கடந்து தான் வருகிறோம்.
இதற்கு அடுத்த கட்டமாக , மக்களை நேரடியாக இது மாதிரி ஏமாற்றாமல் சதுரங்க வேட்டை பட பாணியில் ஒருவனின் ஆசையைத் தூண்டி அவனிடமிருந்து பணத்தைப் பறிக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த சம்பவங்களில், உங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்யுங்கள் 1000 ரூ போட்டால் 5000 ரூ பதிலுக்குக் கிடைக்கும் , 2400 ரூ போட்டால் ஒரு மாதத்தில் ஒரு கிலோ தங்கம் கிடைக்கும் என்றெல்லாம் என்ன என்ன சொல்ல முடியுமோ சொல்லி ஏமாற்றி பணத்தைப் பறிக்கிறார்கள்.
இதையும் தனது பேராசையால் நம்பி பணத்தைப் போட்டு ஏமாறும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு சிறுவனிடம் பரிதாபமாக சிலரும், பேராசையால் சிலரும் ஏமாந்த கதையைப் பார்த்தோம்.
இதையெல்லாம் தாண்டி இன்னொரு பெரிய கூட்டம் இன்று உருவெடுத்துள்ளது.
அதுதான் இருப்பதிலேயே மோசமான பயங்கரமான கும்பல்.
இந்தக்கூட்டம் நேரடியாக ஏமாற்றுவதும் இல்லை, பேராசை பிடித்த மக்களை குறிவைத்து ஏமாற்றுவதும் இல்லை.
மாறாக வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் நல்ல நிலைக்கு வர வேண்டும், நாமும் நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணும் அப்பாவிகளைக் குறிவைத்து அவர்களிடம் வாழ்வில் முன்னேற பணம் சம்பாதிக்க வழி என்று அவர்களை ஆசைவார்த்தை காட்டி பணம் சம்பாதிக்கும் கும்பல்.
இவர்கள் செய்வது சரியா தவறா என்பது கூட நம்மால் யூகிக்க இயலாது.
வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் மக்கள் தான் இவர்களது குறி.
மூளைச்ணலவை தான் இதில் முக்கிய காரணி.
உதாரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது , கிரிக்கெட் மீதான அதீத ஆர்வம் நமக்குள் இருக்கும். அந்த நேரத்தில் நமது அலைபேசியில் இணையம் வழியாக ஐபிஎல் பார்ப்போம் அல்லது குறைந்தபட்சம் எத்தனை ஓட்டங்கள் என்ற தகவலைப் பார்ப்போம்.
அதை மையமாக வைத்துக் கொண்டு , நமது அலைபேசிக்கு அடிக்கடி ஒரு தகவல் வரும்.
எனக்கு வந்தது. கிரிக்கெட் அம்ப்பயர் ஆக விரும்புகிறீர்களா?
ஐபிஎல் போன்ற தொடர்களுக்கு எளிதில் அம்ப்பயர் ஆகலாம்.
எங்களது வகுப்பில் சேருங்கள். விலை வெறும் 1000. முதல் 100 நபர்களுக்கு 200 ரூ மட்டுமே.
இப்படியான விளம்பரம் வரும்.
இதை நம்பி 200 கொடுத்து வகுப்பில் எத்தனை பேர் இணைவார்கள், இதில் எவ்வளவு பணம் புரளும் என்பது ஒரு புறம். இந்த 200 ரூ வகுப்பு அதோடு முடியாது.
முழுமையாக படித்து முடிக்க இவ்வளவு கட்டணம், சான்றிதழ் படிப்பு என்று இது நீளும்.
இது கண்டிப்பாக அவர்களின் வேலைக்கான உத்தரவாதம் இல்லை.
அவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி ஏமாற்றும் செயல் தான்.
இதைப்போலவே சினிமா இயக்குனர் ஆக 100 ரூ வகுப்பு, சினிமா கதாசிரியர் ஆக 200 ரூ வகுப்பு, பாடலாசிரியர் சான்றிதழ் வகுப்பு என்று பல ரூபங்களில் சினிமா ஆசை கொண்டவர்களிடம் வசூல் நிகழ்கிறது.
இதை விடுங்கள் , யூடியூப்பில் எப்படி வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கலாம் என்ற பிரபல யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் 1000 ரூக்கு வகுப்பு எடுக்கிறார்கள்.
நேற்று அடிக்கடி நான் ஒரு விளம்பரத்தைக் கண்டு திகைத்தேன்.
மற்றவர்களின் வாழ்வை எப்படி வழிநடத்துவது என்று சொல்லித் தரும், அவர்களுக்கு அளிவுரை கூறும் லைப் கோச்சிங். அதில் மாதம் 3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.அதற்கு நீங்கள் என்னிடம் வகுப்பில் சேர வேண்டும் என்று.
ஏங்க, இதெல்லாம் ஒரு வியாபரமா?
வாழ்க்கைல ரொம்ப கஷ்டமா இருக்கும் போது காசு கொடுத்து அறிவுரை வாங்க எவன் வருவான்?
இது காசுக்கான வியாபாரம்னா அப்புறம் பெத்தவங்க சொந்தக்காரங்க , நண்பர்கள் எல்லாம் எதுக்கு இருக்காங்க?
உழைத்து முன்னேற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தைக் கூட மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் கூட்டத்திடமிருந்து தள்ளி நிற்க வேண்டும்.
100 ரூ க்கு வகுப்புப் பயின்று ஒருத்தன் சினிமா டைரக்டர் ஆகலாம்னா, தமிழ்நாட்டுல் முக்கால்வாசி பேரு சினிமா டைரக்டராதான் இருக்கனும்.
பாவம். உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ண உடைய மக்களையாவது விட்டு விடலாமே பண முதலைகளே?



