பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு தான்.
தமிழர் பண்டிகை , பாரம்பரிய விழா, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விழா என்பது இன்றளவிலும் மாறாமல் உள்ளது.
விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பது பாரம்பரியம் என்றாலும் இன்றளவிலும் விவசாயம் அல்லாத மற்ற தொழில் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது அதன் தனிச்சிறப்பு.
இதில் சமீப காலமாக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எனக்கு விவரம் தெரிந்து என்னுடைய கல்லூரி நாட்களில் பச்சரிசி, சீனி மற்றும் 100 ரூ பணம் ஆகியவை பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கப்பட்டது.
எங்கம்மா என்னிடம் கெஞ்சி கதறி ரேஷன் கடைக்கு வாடா , என்று கூப்பிட்டாலும் போனதில்லை. ஆனால் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க அக்கறையோடு சென்று அரிசி மற்றும் சீனியை வீட்டில் கொடுத்து விட்டு, 100 ரூ பணத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களோடு பொங்கல் படங்களைக் கண்டு மகிழ்ந்த பொற்காலம் இன்னும் நினைவில் இருக்கத்தான் செய்கிறது.
நாங்கள் ரேஷன் கடையில் நிற்கும் போது ஊரே கேலி செய்யும்.அடேய்களா உங்களுக்கு ரேஷன் கடையெல்லாம் தெரியுமா என்று என்னையும் எனது நண்பனையும் பார்த்து சிரித்து கேலி செய்வார்கள்.
இன்று காலம் மாறிவிட்டது.
அதே பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்று 3000 ரூபாயாக மாறி இருக்கிறது.
அன்று 100 ரூபாயில் கிடைத்த மகிழ்ச்சியை விட இன்று இந்த 3000 ரூபாயை வாங்கிய போது கிடைத்த மகிழ்ச்சி சிறிது குறைவு தான்.
அதற்காகப் பணம் வேண்டாமா அதை என்னிடம் கொடுத்து விடு என்று யாரும் கிளம்பி விட வேண்டாம்.
நான் சொல்வது , அன்று கிடைத்த 100 ரூபாயில் மிகப்பெரிய காரியங்களை சாதிக்க முடிந்தது என்ற ஒரு பேருவகை இருந்தது.
இன்று 3000 ரூ கிடைத்த போதிலும், பத்தாயிரம் ரூபா பத்தாதே என்ற வடிவேலு வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஆள் வளர வளர தேவைகளும், செலவுகளும் ,கடன்களும் அதிகமாகிப் போனது என்பதைத் தவிர வேறென்ன?
அதிலும் அந்த பொங்கல் தொகுப்பை ஒரு திகிலான அனுபவத்தோடு தான் பெற்றேன்.
அதையும் பகிர விருப்பம்.
நான் சென்னை வந்த பிறகு முதலில் ஒரு ரேஷன் கடையில் பயனாளராக இருந்து பிறகு இப்போது வசிக்கும் பகுதியின் லேஷன் கடையின் பயனாளராக கடந்த 4 வருடமாக இருந்து வருகிறேன்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு முன்பு இருந்த வீட்டை காலி செய்து விட்டு பக்கத்து வீட்டுக்குக் குடியேறினேன்.
குடியேறி ஒரு 6 மாதங்களுக்குள்ளாகவே எனது ரேஷன் கார்டில் முகவரியை புதிய வீட்டு முகவரிக்கு மாற்றி விண்ணப்பித்து விட்டேன் முகவரி மாறியும் விட்டது.
பக்கத்து வீட்டுக்கு தான் மாறினேன் என்பதால் அதே ரேஷன் கடையிலேயே பயனாளராகத் தொடர்ந்தேன்.
போன வாரத்தில் ஒரு நாள் எனது மனைவி ரேஷன் கடைக்குச் சென்று இந்த மாத ரேஷன் பொருட்களையும், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான ரசீதையும் பெற்றுக்கொண்டார்.
அந்த ரசீதை எடுத்துக் கொண்டு நான் பேராவலோடு நேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றேன்.
எனது நல்ல நேரம் , கடையில் ஒரு ஆள் கூட இல்லை.
நான் உள்ளே நுழைந்த உடனே என்னைத் தொடர்ந்து இரண்டு பேர். அப்பாடா நம்மதான் மொதல்ல, என்று மகிழ்ந்து கொண்டேன்.
கடையில் பில் போடுபவர் ஆள் மாறி இருந்தார். எடை போடும் அண்ணாச்சி மாறவில்லை.அதே பழைய ஆள்தான்.
சரி யாருமாறுனா நமக்கென்ன, நமக்குத் தேவை 3000 ஓவா என்று மனதில் எண்ணிக்கொண்டு நின்றேன்.
பிரிக்கப்பட்ட 500 ரூ கட்டை மேசையின் மீது வைத்து விட்டு அதன் மீது எடைக்கல்லை வைத்து விட்டு , பில் போடும் அலுவலர் அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டே இருந்தார்.
ஏதோ எடை இயந்திரத்தை பில் போடும் இயந்திரத்தோடு இணைத்து ஏதோ செய்துகொண்டிருந்தார்.
ஐயா சின்னராசு, நீங்க பச்சரிசி,சீனி தாராம விட்டாகூடப் பரவால,கார்ட வாங்கிட்டு ரூவாயக் கொடுங்களேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்
ஒரு 4-5 நிமிடம் எனது பொறுமையை சோதித்து விட்டு பில் போட வந்தார்.
வந்து எனது குடும்ப அட்டையை அந்த இயந்திரத்தில் காட்டி விட்டு, சார் நீங்க இந்தக் கடை இல்லையா ? வேற கடையா என்றார்!
எனக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது.
இல்ல சார், இந்தக்கடை தான் என்றேன்.
எடை போடும் அண்ணாச்சியும் , சார் இந்தக் கடை தான் எனக்கு நல்லாத் தெரியும் என்றார்.
அண்ணன், மிஷின் ல காட்டுனா வர மாட்டுது அண்ணே. ஏதோ மாறிருக்கு என்று சொன்னார்.
என் மனதுக்குள் , சோனமுத்தா போச்சா? என்ற எண்ணம் எழ ஆரம்பித்து விட்டது.
நான் விடவில்லை.
சார் நான் இந்தக் கடை இல்லாட்டி இந்த டோக்கன் எப்படிக் குடுத்தீங்க எனக்கு என்றேன்.
சார், நீங்க இந்தக் கடையில இருந்திருக்கலாம், போன வாரம் வந்தப்ப பேர பாத்துட்டு டோக்கன் கொடுத்துருக்கோம். இப்ப மிஷின்ல காட்டலியே? சரி இருங்க மிஷின் ல ஏதும் பிரச்சினையானு பாப்போம் என்று எனக்கு அடுத்து வந்தவரிடம் அட்டையை வாங்கி ஸ்கேன் செய்ய அது பரிசீலிக்கப்பட்டது.
சார், மிஷின் லாம் நல்லதான் இருக்கு. நீங்க அட்ரஸ் ஏதும் மாத்துனீங்களா என்று கேட்டார்.
ஆமா சார் மாத்தினேன்.
ஆனா பக்கத்து வீட்டுக்கு தானே குடி போயிருக்கேன்
அதில்லாம நான் அட்ரஸ் மாத்தி 1 வருஷம் ஆவப்போகுதே என்றேன்.
சார் ஒருவேள ஒரு வருஷம் கழிச்சு மாறிடுச்சோ என்னவோ என்றார்.
உடனடியாக மின்னனு அட்டை நகலைப் பதிவிறக்கம் செய்து பார்த்தேன்.
கடை மாறியிருந்தது.
அடப்படுபாவிகளா, பொங்கல் டோக்கன் வாங்கிட்டு பரிச வாங்குற கேப்ல இப்படி கடைய மாத்தீட்டீங்களே டா?
இதுக்காடா நான் ஆசை ஆசையா வண்டிய எடுத்துக்கிட்டு இந்தக் கடைக்கு வந்தேன் என்ற மனக்குமுறல்.
கடைக்காரரோ, ஏய் மூதேவி, உங்கப்பன எரிச்ச இடம் அங்க இருக்கு, இது தூக்குப்போட்டு செத்த சாந்தியோட சாம்பல் என்ற கோணத்தில், ஈபி ஆபிஸ் பக்கத்துல இருக்க கடைக்கு போ.
அட்ரஸ மாத்திட்டு எங்க உசுர வந்து வாங்காத என்ற ரீதியில் நாசூக்காக சொல்லி அனுப்பினார்
அடப்பாவிகளா, இப்படி பொங்கல் பரிசு வாங்குற நேரத்துல கடைய மாத்தீட்டீங்களே என்று புலம்பிக் கொண்டே பதறியடித்து அந்தக்கடைக்கு ஓடினேன்.
போயி பாத்தா 20 பேர் நிக்கிறாங்க.
மனசு நொந்து போயி, வரிசையில தம் கட்டி நின்னு ஒரு வழியா பில் போடுற இடத்துக்கு கிட்ட போயிட்டேன்.
காதலன் படத்துல வர பெண் போலீஸ் மாதிரி ஒரு அக்கா. ஆனா பரவால கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தாங்க. சரியா எனக்கு முந்தின ஆள் அவங்க்கிட்ட போனப்ப, சாப்புட போகனுமே என்ற ரீதியில் ஏதோ பேசுனாங்க.
அய்யயோ சோலி முடிஞ்ச்சா. இந்த அக்கா வேற சாப்புட கிளம்புது போலயே என்று நான் பதற, அந்த அக்கா என்ன நினைத்ததோ தெரியவில்லை, பணியைத் தொடர்ந்தது.
அவரது அயராத உழைப்புக்குப் பாராட்டுகள்.
இவன் யார்ரா இந்த மொட்ட, நம்ம கடைக்கு பொங்கல் பரிசு வாங்க வந்துருக்கான் என்ற ரீதியில் ஒரு முறை பார்த்துவிட்டு கார்டை ஸ்கேன் செய்தது.
கார்டு பரிசீலிக்கப்பட்டது.
” இதுபோதும் எனக்கு இது போதுமே” என்ற பாடல் பிண்ணனியில் ஒலிக்க, அந்த அக்கா என்னை ரேகை வைக்கச் சொன்னார்கள்.
ரேகை வைத்தேன் , பரிசீலிக்கப்படவில்லை,நான்கு முறை முயற்சி செய்தும் அது பரிசீலிக்கப்பட்டவில்லை.
ஏன் சார், உங்களுக்கு கை வச்சா ரேகை வருமா? இதுக்கு மின்ன வாங்கியிருக்கீங்களா என்று கேட்டார்.
நான் வாங்கியிருக்கேன், அப்பப்ப வாங்குவேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் ரேகை வைத்தேன்.
ஒரு வழியாக மிஷின் கண்ணைத் திறந்தது.
என்னுடைய பொங்கல் பரிசும் கிடைத்தது.
பொங்கலோ பொங்கல்.



