படித்ததில் பிடித்தது.
தமிழ் படங்களுக்கு கர்நாடகத்தில் பிரச்சனைகள் பல ஆண்டுகாலமாகவே நடந்து வருவதுதான். அந்தச் சமயத்தில் சில கர்நாடக அமைப்புகள் தமிழ் படங்களை திரையிட விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதும் வாடிக்கையான ஒன்றுதான். இதை இங்கே இப்போது சொல்லக் காரணம் என்னவென்றால், முன்பு பல வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னட நடிகர் சிவாஜி வெறியராகவே இருந்தவர். அவர் சொன்ன ஒரு கருத்துக்காகவே அவருக்கு எதிராக கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களையும் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் செய்தன.
அந்த நடிகர் சொன்ன கருத்துதான் என்ன? “உலகிலேயே சிறந்த நடிகர் சிவாஜி தான். நான் அவரின் பரம பக்தன். ஏன், அவரின் வெறியன் என்று கூட சொல்லலாம்.” இதுதான் அந்த நடிகர் சொன்ன கருத்து. அந்த நடிகர் யார்? அதற்குப் பின் என்ன நடந்தது ….
1996-ல் கன்னடத்தில் திரு. சாய்குமார் நடிப்பில் வெளிவந்த ‘போலீஸ் ஸ்டோரி’ திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. படம் ஒரு வருடங்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது. படம் தமிழ், தெலுங்கு என்று டப்பிங் செய்யப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் சக்கை போடு போட்டது. அந்த ஒரே படத்தின் வெற்றி திரு. சாய்குமார் அவர்களை திரையுலகமே திரும்பிப் பார்க்க வைத்தது.
அந்த வெற்றி கன்னட முன்னோடி நடிகர்களை பொறாமை கொள்ளச் செய்தது. படத்தின் இத்தனை பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன என்று சாய்குமாரை மீடியாக்கள் பேட்டியெடுத்தனர். அந்தப் பேட்டியில் மீடியாக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்ன சாய்குமார், “உங்களுக்கு யாருடைய நடிப்பு பிடிக்கும்?” என்ற கேள்வி கேட்டபோது, “நான் சிவாஜி சாரின் ரசிகன், பரம பக்தன்” என்று கருத்து தெரிவித்தார். மேலும் இந்த ‘போலீஸ் ஸ்டோரி’ திரைப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன் ‘தங்கப்பதக்கம்’ சௌத்ரிதான் என்றும் கருத்து சொன்னார்.
திரு. சாய்குமார் மேலும் கூறுகையில், “நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு சினிமா ஆசையைத் தூண்டியது. தங்கப்பதக்கத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் போலீஸ் ஸ்டோரியில் நடித்தேன்” என்றும், தனது பூஜை அறையில் நடிகர் திலகத்தை வைத்து வணங்கி வருகிறேன் என்றும் வெளிப்படையாகவே புகழ்ந்தார்.
’போலீஸ் ஸ்டோரி’யின் வெற்றியைத் தொடர்ந்து ஏராளமான படங்கள் குவியத் தொடங்கின சாய்குமாருக்கு. பெரிய ஸ்டாராக சாய்குமார் கன்னட உலகில் வலம் வரத் தொடங்கினார். ஏற்கனவே பொறாமை கொண்ட கன்னட முன்னணி நடிகர்கள் சாய்குமார் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த கன்னட அமைப்புகளைத் தூண்டிவிட்டனர். கன்னட அமைப்புகளும் அவரை எதிர்க்க எந்தக் காரணமும் இல்லாமல் போக, இறுதியாக “சிவாஜி தமிழர், அவரை எப்படி இங்கு புகழலாம்? இங்கு எங்கள் ராஜ்குமாரை மட்டுமே புகழ வேண்டும்” என்ற நிபந்தனையை விதித்தனர்.
கொஞ்சமும் பணிந்து போகாத திரு. சாய்குமார் அவர்கள், அதுவரை ஒப்பந்தம் செய்து கொண்ட படங்களையெல்லாம் நடித்து முடித்துவிட்டு வெளியேறி, தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்தி தெலுங்கு பட உலகிலும் வெற்றி பவனியுடன் வரத் தொடங்கினார். அவ்வப்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
சாய்குமாரின் நிலையில் வேறு நடிகர்கள் இருந்திருந்தால் அவரைப் போல் மற்றவர்கள் நடந்து கொள்வார்களா என்பதை இங்கே நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு மன்னிப்புடன் தங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் எவ்வளவு பெரிய இழப்பு வந்தாலும் தான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்கவில்லை சாய்குமார். இப்படி தமிழர் சிவாஜி அவர்களைப் போற்றியதால் எத்தனை பெரிய இழப்பை ஏற்றுக்கொண்டார் திரு. சாய்குமார் அவர்கள்.
இந்த செய்தியை எந்த ஒரு நடுநிலை ஊடகங்களும் அப்போது வெளியிடவில்லை. நடிகர் திலகம் பற்றிய செய்திகளை தமிழக மக்கள் அறியாத வண்ணம் பார்த்துக் கொள்வது மட்டுமே தமிழ் ஊடகங்கள் மேற்கொண்டு வரும் முதல் துரோகச் செயலாக இன்று வரை இருந்து வருகின்றது.
அந்தச் சமயத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு:
சாய்குமார் அவர்களின் வீட்டை சில கன்னட அமைப்புகள் முற்றுகையிட்டு பெரிய ரகளையில் ஈடுபட்டபோது, அவர் அதற்கெல்லாம் மசியவே இல்லை. பிரச்சனை பெரிதாகவே, கன்னட ராஜ்குமார் நேரில் வந்து அந்த கூட்டத்தினரைப் பார்த்து, “சாய்குமார் சொன்னதற்காக நீங்கள் அவர் வீட்டை முற்றுகையிட்டு கலவரம் செய்கிறீர்கள். எனக்கும் பிடித்த நடிகர் சிவாஜிதான். இதை நான் சொன்ன வினாடியே என் வீட்டுக்கு வந்து இப்படி நீங்கள் கலவரம் பண்ணுவீர்களா?” என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டுவிட்டு, “சாய்குமார் சொன்னதில் தவறில்லை. நான் கூட நடிகர் திலகத்தின் ரசிகன்தான். நீங்கள் கலைந்து செல்லுங்கள்” என்று ராஜ்குமார் கூறிய பின்னரே அந்த முற்றுகைப் போராட்டம் கலைந்து போனது.
சாய்குமார் நடிகர் திலகத்தின் மேல் வைத்துள்ள பக்திக்கு மேலும் ஒரு உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவம்:
நடிகர் திலகம் மறைந்த பின் அன்னை இல்லத்திற்கு வந்த சாய்குமார், அன்னை இல்லத்தில் இருந்தவர்களைப் பார்த்து, “சிவாஜி அணிந்திருந்த காலணிகளில் ஏதாவது ஒன்றை எனக்குத் தாருங்கள்” என்று கேட்டு வாங்கிச் சென்றாராம். அதைத் தன் வீட்டில் வைத்து தினமும் படப்பிடிப்பிற்குச் செல்லும் முன்பு அந்த காலணிகளைத் தொட்டு வணங்கிவிட்டே செல்வாராம். இந்தச் செய்தியை இங்கே நான் சும்மா சொல்லவில்லை. இது ஒரு பிரபல பத்திரிக்கையில் ஒரு கட்டம் கட்டி வந்த செய்தியாகும். ஒரு பிரபல நடிகராக அவர் மாறிய பிறகு கூட அவர் இப்படி இருக்கிறார் என்றால் அவர் நடிகர் திலகத்தின் மேல் எந்த அளவுக்கு பக்தி உள்ளவராக இருப்பார் என்று நமக்கு ஆச்சரியம் வராமல் இல்லை.



