கார்த்திகை, மார்கழி என்றாலே சபரிமலை மற்றும் ஐயப்பன் சீசன் என்ற வார்த்தையை அடிக்கடி நாம் கேட்பதுண்டு. மேலும் இணையங்களிலும் , வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் அருள்பாலிக்கத் துவங்கி விடுவார்.
மற்ற மாதங்களில் ஐயப்பனை மறந்தும் , மறைத்தும் விடுவார்களோ என்ற அளவில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனைப் பற்றிய சம்பாஷனைகள் அதிகரிப்பது வழக்கம்.
இது கேலிக்காக அல்ல. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் எப்படியான ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்களோ அதே மாதிரியான ஒழுக்கத்தை வருடம் முழுக்கக் கடைபிடித்தால் நல்லது என்பதற்காகத் தான் சொல்கிறோம்.
அதுசரி இப்போதெல்லாம் மாலை போட்டால் மட்டும் ஒழுங்காகவா நடந்து கொள்கிறார்கள் என்ற பேச்சும் பரவலாகத்தான் உள்ளதே?
மாலை போட்டு சிகரெட் அடிப்பது, பாக்கு போடுவது , போன்ற காரியங்களைச் செய்வதும் உண்டு, அவ்வளவு ஏன் மாலை போட்டு விட்டுத் தண்ணி அடிக்கும் சாமிகளும் கூட இருக்கத்தான் செய்கிறது.
இதெல்லாம் அவர்களது சொந்த சுய ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. அவர்களுக்கும் ஐயப்பனுக்கும் இடைப்பட்ட சமாச்சாரம்.
ஆனால் மாலை போட்டு மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிக்க வரிசையில் நிற்கும் போது ஒரு ஒழுங்கைக் கடைபிடிக்காமல், பொறுமை காக்காமல் குறுக்கு வழியில் ஏறி மிதித்து நசுக்கி பிற பக்தர்களையும் கஷ்டப்படுத்தி விரைவாக தரிசனம் காண வேண்டும் என்பதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்.
மேலும் சபரிமலைக்கு மாலை போடுவது என்பது இன்றைய தேதியில் சிலருக்கு ஒரு வழக்கமாகவும், ஒரு பேஷனாகவும் கூட ஆகிவிட்டது.
ஆத்மார்த்தமாக 48 நாள் விரதம் கடைபிடித்து ஒருமித்த பக்தி மனதோடு மலைக்குச் சென்று தரிசனம் காண வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், நானும் மாலை போடனும், நானும் மலைக்குப் போயிட்டு அப்படியே குற்றாலத்துல குளிச்சுட்டு அப்படியே சிப்ஸ் வாங்கிட்டு ஜாலியா இருக்கனும் என்ற ரீதியில் பலரும் கிளம்பிவிட்ட காரணத்தால் தான் இன்றைய தேதியில் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிறது.
இந்த வருடம் சபரிமலைக்கு சென்று வந்த ஒரு சாமி புலம்பியதைக் கேட்கும் போது மனதில் தீராத வருத்தமே ஏற்பட்டது.
பம்பை கடந்து சில தூரத்தில் இருந்தே கூட்டம் ஆமை வேகத்தில் நகரத்துவங்கி அதன்பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நகரமுடியாமல் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இப்படியே கால்கடுக்க நின்று நின்று 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த 20 மணி நேரத்தில் அவர்கள் அனுபவித்தது சொல்லொணாத் துயரம்.
திருப்பதி போல கூண்டுகளும், பாலும் ,பண்டமும் கிடையாது, ஒண்ணுக்குப் போகக்கூட வழி கிடையாது.
இவ்வளவு ஏன் மூச்சு விடுவதே சிரமம். அத்தனை நெருக்கமாக அனைத்து பக்தர்களும் நிற்கும் பட்சத்தில் அங்கே சுத்தி சுத்தி கரியமலவாயுவின் வெளியேற்றம் அதிகரித்து அதன் கொள்ளளவும் அதிகரித்திருக்கும்.
நாங்க பரவால உயரமா இருக்கோம், தலையத்தூக்கி மூச்சு விட்டுக்குவோம், குழந்தைங்க எல்லாம் பாவம் என்று சொன்னார்.
இதுல வேற பொறுமை இல்லாம தள்ளு முள்ளு வேற. சரணம் சொல்லிக்கிட்டு போன சாமிகள், சண்டை போட்டு தகாத வார்த்தைகள் எல்லாம் பேசினாங்க. மாலை போட்டு சரணம் சொல்லி ஒழுக்கமா நிம்மதியா தரிசனம் முடிச்சு வரமுடியல.
நிறைய பேரு சும்மா ஒரு வாரம், 3 நாள் விரதமிருந்து வந்த மாதிரி தான் இருக்கு. 48 நாள் விரதமிருந்து தான் சபரிமலை வரனும்னு எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சுட்டா இந்த அளவுக்குக் கூட்டம் இருக்காது என்று சொன்னார்.
உண்மைதானே? நானும் மலைக்குப் போறேன், இருமுடி கட்டுறேன் பேர்வழின்னு எல்லாரும் போகும் காரணத்தால் தானே இவ்வளவு கூட்டம்.
எப்படி பெண்கள் அங்கே அனுமதி இல்லையோ அது போல, 48 நாள் விரதமில்லாதவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. தயவு செய்து 48 நாள் விரதமிருக்காமல் கார்த்திகை மார்கழி மாதங்களில் வராதீர்கள் , மற்ற மாதங்களில் வேண்டுமானால் வாங்க என்று ஒரு அறிக்கை வந்தால் ஒரு நல்ல மாற்றம் வரலாம்.
அதேபோல பெரிய பாதையில் வந்தவர்களும், சின்னப் பாதையில் வந்தவர்களும் ஒரு சேர காத்திருப்பதை மாற்றி, முன்னாட்களில் திருப்பதியில் படியேறி வந்தவர்களுக்கு ரசீது கொடுத்து முன்னுரிமை கொடுத்தது போல, பெரிய பாதையில் வந்தவர்களுக்கு முன்னுரிமை தரலாம்.
ஏதாவது கடுமையான மாற்றங்கள் இல்லாவிட்டால் இன்னும் சில காலத்தில் தூய்மையான பக்தி காணாமல் போய் விடும்.
கண்டிப்பாக மாற வேண்டும்.



