உண்ண உணவு, உடுக்க இடை, இருக்க இருப்பிடம், இவை மட்டுமல்ல மனிதனின் அடிப்படைத் தேவைகள்.
நல்ல குடிநீரும், தூய்மையான காற்றும் நமது வாழ்வாதாரம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமை.
அப்படியிருக்கும் பட்சத்தில் தான் தரமான நல்ல குடிநீர் வழங்குவதில் அரசாங்கம் இத்தனை மெனக்கெடுகிறது.
சமீபத்தில் இந்தூரில் குடிக்கும் நீரில் கழிவு நீர் கலந்து, சில உயிர்கள் போனது கண்டு நாம் எவ்வளவு வேதனை கொண்டோம்?
அது அரசாங்கத்தின் தவறு என்பதால் எளிதாக அதன்மீது பழியும் போட்டு விட்டு துக்கம் அனுசரித்து விடலாம்.
இதே காற்றில் மாசு, கொடிய விஷமாகக் காற்று மாறி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை சாவடிக்கிறது, அதற்கு நாமே காரணம் என்றால் நாம் அதை ஏற்றுக் கொள்கிறோமா ? அல்லது திருந்துகிறோமா?
தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடித்து காற்றின் தரம் நஞ்சாகிப்போனது.
அதிலாவது ஒரு சின்ன காரணம் உள்ளது.
குழந்தைகளின் மகிழ்ச்சி மற்றும் பட்டாசுத் தொழில் செய்து வாழும் குடும்பங்களின் நலன்.
ஆனால் போகிப் பண்டிகை அன்று நாம் செய்த செயல் எந்த விதத்தில் நியாயம்?
முன்பு விவசாயம் பிரதான தொழிலாக இருந்த போது விவசாயக் கழிவுகளை எரிப்பது போகிப் பண்டிகையின் வழக்கமாக இருந்தது.
மேலும் வீட்டில் அந்தக் காலத்தில் உபயோகம் செய்த பொருட்கள் துடைப்பான் , முறம் ஆகியவை ஓலையிலும், ஈக்கியிலும் செய்தவை. அவற்றையும் அந்த விவசாயக் கழிவுகளோடு எரித்து விட்டுப் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று போகியைக் கொண்டாடினார்கள்.
ஆனால் நாம் இன்று என்ன செய்கிறோம்?
எதையாவது எரிக்க வேண்டும் என்பதையே சாங்கியமாக ஆக்கி விட்டோம்.
ப்ளால்டிக் கழிவுகளையும், பெரிய பெரிய ரப்பர் டயர்களையும் எரித்து, அதைக் கடவுளுக்கு செய்யும் சாங்கியமாக கற்பனை செய்து கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம்.
போகி அன்று சென்னையின் காற்று தரச் சுட்டெண் ( Air Quality Index) – 900 க்கும் அதிகம்.
AQI- 50 இருக்கும் ஊர்களே சுத்தமான வாழத்தகுந்த ஊர்கள்.
மற்ற சாதாரண நாட்களிலேயே சென்னையில் அது 200 ஐ நெருக்கி உள்ளது.
அதுவே கேடானது தான்.
900 எல்லாம் நஞ்சு அளவு. நாமே விஷம் குடிப்பதற்குச் சமம்.நாம் செய்யும் இந்த மூடத்தனத்தால் நாம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை.நம்மைச் சுற்றி இருக்கும் பொது மக்களும், இந்த ஊரும் தான்.
கடவுள் நம்பிக்கை மத நம்பிக்கை தவறில்லை.
ஆனால் நம்மை பாதிக்கும் எந்த ஒரு மூடநம்பிக்கையுமே தவறு தான்.
திருந்துவோமா?
மனதிலிருக்கும் மூடநம்பிக்கையை மட்டும் எரிப்போம்!



