பிஞ்சுக் குழந்தைகளைக் கற்பழித்துக் கொலை செய்து விட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்தவனும் இருக்கிறான்.
பல பெண்களை ஏமாற்றி கற்பழித்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கிப் படம் எடுத்தவன் நீதிமன்ற வளாகத்தில் சிரித்தவாறு கையசைத்து விட்டு வாய்தாவுக்கு வருகிறான்.
இவர்களைப் போன்ற கேடுகெட்டவர்களின் மத்தியில், பல வக்கிர எண்ணங்களைச் சுமந்து கொண்டு வெளியே நல்லவன் போல, நமக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நாமும் கெட்டவன் தான் என்ற ரீதியில் வாழும் பலரும் நிறைந்த இந்த உலகில், ஒரு மனிதன் தன் மீது விழுந்த பழியால் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டிய அவசியம் என்னவோ?
இங்கே இருக்கும் எல்லோரும் உத்தமர்கள் போல, இவன் இப்படிச் செய்து விட்டானே அப்படிச் செய்து விட்டானே என்று பேசிப் பேசி , இவரை விடப் பெரிய அயோக்கியன் உலகில் இல்லை என்றவாறு கமெண்டுகளைப் போட்டுத் திட்டித்தீர்த்து அந்த மனிதனைத் தற்கொலைக்குத் தூண்டி விட்டிருக்கிறார்கள்.
இது இந்த சமூகம் அவரின் கழுத்தை நெறுக்கிச் செய்த கொலை தானே ஒழிய வேறென்ன?
இப்போது அந்த மனிதன் இறந்துவிட்ட பிறகு அவர் மீது பெரிய அளவில் கருணை கொண்டு, அந்த காணொளி எடுத்த பெண்ணை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறது இதே சமூகம்.
ஒருவேளை அந்தப் பெண்ணிற்கும் இது்போல ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால் இந்த சம்பவத்தை விட்டு மெதுவாக நகர்ந்து ஐபிஎல் பக்கமோ, இந்திய நியூசிலாந்து கிரிக்கெட் பக்கமோ திசை திரும்பி விடுவார்கள்.
ஒரு ஆண் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயற்சி செய்தாலே பெண்கள் எளிதாகக் கண்டறிந்து விடுவார்கள்.
அப்படிக் கண்டறிந்த உடனே நகர்ந்திருக்கலாம் அல்லது அந்த இடத்திலேயே கண்டித்து விட்டு நகர்ந்திருக்கலாம். இதே சமூக வலைதள மோகத்தில் விழுந்திருந்த பெண் என்பதாலேயே அந்த சம்பவத்தைக் காணொளியாக எடுத்துத் தன்னுடைய வலைப்பக்கத்தில் தான் பட்ட அசிங்கத்தை வெளிப்படுத்தியிருக்கலாம்.
இது ஒரு விதமான மனோ வியாதியாகத் தான் நமது சமூகத்தில் பலருக்கும் மாறி விட்டது.
அந்த ஆண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டிப்பாக அந்தப் பெண் இந்தக் காணொளியை வெளியிட்டிருக்கிற வாய்ப்பில்லை. தனக்கு பிரபலத்துவம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கும் என்ற வகையில் தான் அந்தக் காணொளியை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
அந்த மனிதனின் இறப்புக்கு மூலகாரணம் இந்தக் காணொளி என்றாலும், அது இந்த அளவிற்கு பரப்பப்பட்டு அவர்மீது இவ்வளவு வக்கிரமும் வன்மமும் காட்டப்படாமல் இருந்திருந்தால் இப்படியான ஒரு இழப்பு நிகழ்ந்திருக்காது.
ஆக, அந்தப்பெண் இந்த சம்பவத்திற்கு எவ்வளவு காரணமோ , அதே அளவு காரணம், சமூக வலைத்தளங்களில் பிரபலத்துவத்திற்காக கண்டதைச்செய்யும் நமது சமுதாயமும் தான்.
தன்னுடைய வக்கிரத்தை , வன்மத்தை எவன் மீதாவது திணிக்கும் அந்தச் செயல் தான்.
இனியாவது திருந்தலாமே?
அந்தப் பெண்ணைத் துரத்தித் துரத்தி பலி போட்டுக் கொன்று விடாமல் இனியாவது அந்தப் பெண்ணும் நமது சமுதாயமும் திருந்தட்டும்.
போன உயிர் நமக்குப் பாடமாக அமையட்டுமே?


