விசில்.
உலகத்திலேயே உன்னதமானது விசில்.
ஆரவாரத்தில் அடிப்பது விசில்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விசில்.
யாரையாவது கூப்பிடுவதற்கு அடிப்பது விசில்.
உடற்கல்வி ஆசிரியர் அடிப்பது விசில்.
வாட்ச்மேன் அடிப்பது விசில்.
யாராவது வழிதவற நடந்தால் அவர்களை வழிநடத்த காவல்துறையினர் அடிப்பது விசில்.
தமிழனின் பாரம்பரியம் விசில்.
இரண்டாம் நூற்றாண்டிலேயே விசில் புழக்கத்தில் இருந்துள்ளது.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியது விசில்.
கம்பரும் கூட கம்ப இராமாயணத்தில் விசிலின் பெருமை பற்றி பேசியிருக்கிறார்.
முதலில் தூது சென்ற அனுமன் சீதையிடம் சீதாப்பிராட்டி, நான் அடிக்கிறேன் சீட்டி என்று இராமனின் தூதாக விசிலடிப்பதாகத் தான் இருந்ததாம்.
எங்கே விசிலடித்தால் இராவணனுக்குத் தெரிந்து விடுமோ என்று தான் யாழியை தூதாக அனுப்பினாராம்.
கும்பகர்ணனை எழுப்ப அடிக்கப்பட்டது விசில்.
குக்கர் அடிப்பது விசில்
அந்த விசில் அடித்தால் தான் நமது வயிறே நிறையும்.
விசிலின் பெருமை பற்றி நாலடியாரிலும் கூட சில பாடல்கள் இருப்பதாகத் தகவல்.
அதை நாம் பிறகு பேசலாம்.
மேலும் , குழல் , யாழ், போல தமிழரின் பாரம்பரிய வாத்தியங்களில் விசிலும் ஒன்று என்று தமிழறிஞர் உ.வே.சாமிநாதர் குறிப்பிடுகிறார்.
ஆனால் அதை எங்கு குறிப்பிடுகிறார் என்பதை எலெக்ஷன் முடிந்த பிறகு தேடி ஆராயலாம்.
திருவள்ளுவர் கூட
குழல்இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள்
விசில்சத்தம் கேட்கா தவர்.
என்று தான் முதலில் திருக்குறள் இயற்றினார்.
ஆனால் நமது எதிரிக்கட்சிகள் சதி செய்து அதை சதி செய்து ஏதேதோ மாற்றி விட்டார்கள்.
விசிலடிச்சான் குஞ்சுகள் என்று நம்மை கேலி செய்தவர்களுக்கு எதிராக நாம் பலமாக விசில் அடிப்போம்.
நாங்கள் விசில் அடித்தால் விண்ணைப் பிளக்கும் சத்தம் வரும் என்று நமது ஒற்றுமையைப் பரைசாற்றுவோம்.
நமது தொண்டர்களில் பலருக்கு ஓட்டுப் போட வயதாகவில்லை என்று சொல்கிறார்கள்.
இனி அவர்கள் அனைவரும் எதிர்கட்சி கூட்டங்களுக்குச் சென்று விசில் அடித்து நமது சக்தியை நிரூபிப்போம்…
வாக்களிக்கச் செல்லும் நமது தொண்டர்கள் வாக்குச் சாவடியிலும் விசிலடித்து நமது பலத்தை நிரூபிப்போம்.
விசிலே சக்தி, விசிலே பலம்
விசிலே ஆயுதம்.
விசிலடிப்போம் , விதியை மாற்றுவோம்.


