மங்களம் மங்களம் நித்ய சுப மங்களம் மங்களம் என்றொரு பாடல் உண்டு.
மார்கழி மாத பஜனையின் போது கார்த்திகை மாத சோமாவார பஜனை துவங்கி, மார்கழி முழுக்க விடியற்காலை பஜனை பாடி, தை 1 ஆம் தேதி அதையும் முடித்து, பிறகு அந்த பஜனை காலத்தல் வசூலான பணத்தில் பிரசாதம் தயாரித்து படையலிட்டு பஜனை பாடி பொதுமக்கள் அனைவருக்கும் பரிமாறி கணக்கு முடிக்கும் ஒரு நாள்.
அந்நாளில் இறுதிப் பாடலாக இந்த மங்களம் என்ற பாடலைப் பாடுவோம்.
நாம் அடிக்கடி விளையாட்டாகக் கூடிய முடிவுரை என்பதை மங்களம் போட்டாச்சு என்று சொல்வதுண்டு.
அதே மங்களம் தான் இதுவும்.
இதுவரை நான் தினசரி எழுதி வந்த கட்டுரைகளுக்கான மங்களம்.
ஒரு கட்டுரையை உருவாக்குவது அவ்வளவு பெரிய சாதனை இல்லை என்றாலும், ரொம்ப எளிதும் அல்ல.
அதற்கென சில வழிமுறைகள் உள்ளன.
அதன்படி எழுதியாக வேண்டும்
மற்றொரு முக்கியமான விஷயம், என்ன எழுதுவது?
அதாவது ஒரு விஷயத்தை எழுதும் போது அது படிப்பவர்களுக்கும் மனதில் ஒத்துப்போகும் விஷயமாக இல்லாவிட்டால், வாசிப்பவர்கள் அதை திறந்து கூடப் பார்க்க மாட்டார்கள்.
உதாரணத்திற்கு ஒரு திரை விமர்சனம் எழுதும் போது கூட, ஓரளவு பெரிய நடிகரின் படத்தைப் பற்றிய விமர்சனத்தை அதிகபட்ச ஆட்களும், மற்ற படங்களின் விமர்சனங்களை குறைந்தபட்ச ஆட்களுமே வாசிப்பது வழக்கம்.
மேலும் வாசிப்பு என்பது வழக்கொழிந்து கொண்டிருக்கிறது, அதை மீண்டும் வழக்கப்படுத்தலாம் என்று தான் இத்தனை முயற்சியும்.
ஒரு இணையதளப் பக்கத்தை உருவாக்கி அதைப் பராமரிப்பது எளிதல்ல.
என் நண்பர் சிவப்ரேம் பிரயாசைப்பட்டு இதைச்செய்து எழுதும் எனக்கும் ஊக்கத் தொகை அளித்து இதற்கு இரண்டு வருடத்திற்கும் மேலாக ஒத்துழைத்து வழிநடத்தி வந்தார்.
ஆனால் நாளுக்கு நாள் வாசிப்புகளின் எண்ணிக்கை தேய்பிறைப் போலத்தான் இருக்கிறது.
எனது பெயரில் இருந்த முகநூல் பக்கத்தில் பல நண்பர்கள் நல்ல வாசகர்களாக இருந்தனர்.
அப்போது ஒரு கட்டுரையை சராசரியாக 30-40 நபர்களும், திரை விமர்சனங்களை சராசரியாக 100 வாசகர்களும் அதிகபட்சமாக கோட் பட விமர்சனக் கட்டுரையை 240 நபர்களும் வாசித்திருந்தனர்.
ஆனால் நான் எழுதிய ஒரு கட்டுரையை முழுதாகப் படிக்காமல், மேற்கோளை வாசித்து விட்டு அது சமூக சிந்தனைக்கு எதிராக இருக்கிறது என்று கூறி அந்தப்பக்கத்தை முடக்கி விட்டார்கள்.
அதனால் எனது வாசகர்களை இழந்தேன்.
மீண்டும் புதிய பக்கத்தை உருவாக்கியும் கூட என்னால் அந்த பழைய வாசகர் எண்ணிக்கையைக் கொண்டு வர இயலவில்லை. எண்ணிக்கை மூன்று மடங்கு குறைந்து விட்டது.
எல்லாம் காணொளி மயமாக செயற்கை நுண்ணறிவை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதால் யாருக்கும் ஒரு கட்டுரையைத் திறந்து வாசிக்க நேரமில்லை.
ஒரு பிரச்சினை பற்றி நாம் எழுதுவதை 15 பேர் வாசிக்கிறார்கள்.
அதே பிரச்சினை பற்றிய காணொளியை 15 லட்சம் பேர் பார்த்து சிலாகிக்கிறார்கள்.
நான் பிரபல எழுத்தாளரும் கிடையாது, என்னை யாரும் கொண்டாடவும் வேண்டும் என்பது என் எண்ணம் கிடையாது.
ஆனால் குறைந்தபட்ச பராமரிப்புச் செலவக்கும் வழி இல்லாமல் ஒருவரை நஷ்டப்படுத்தி இதைத் தொடர்வதை விரும்பவில்லை…
எதற்குமே சிறிது இடைவெளி விட்டு யோசித்துச் செய்வது நல்ல பலன் தரும்.
இப்போதைக்கு இந்த நினைவுகள் பக்கத்திற்கு ஒரு இடைவெளி விடுகிறோம்
இனி தினசரி கட்டுரை இல்லை.
அவ்வப்போது ஏதாவது முக்கியமான சில விஷயங்களைப் பேசலாம்.
இரண்டாட்டுக்கும் மேலாக ஆதரவளித்த வாசகர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும்!

