சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பகிரப்பட்ட அந்த
எட்டு வயதுக் குழந்தை பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட விவகாரத்தில் சில கேள்விகள்.
தலைமை ஆசிரியரிடம்:
ஐயா வணக்கம்.
தாங்கள் அந்தக் குழந்தை சமூக ஊடகங்களில் காலம் கழிக்கிறது, சரியாகப் படிக்கவில்லை என்று காரணம் சொல்லி அந்தக் குழந்தையைப் பள்ளியை விட்டு அனுப்பியதாகச் சொன்னீர்களே!
இது எந்த விதியின் அடிப்படையில் செய்யப்பட்டது?
எட்டு வயதுக் குழந்தை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால், பள்ளியிலிருந்து அனுப்பலாம் என்று ஏதேனும் நடைமுறை உள்ளதா?
மேலும் அந்தக் குழந்தையைப் பார்த்து மற்ற குழந்தைகள் கெட்டுப் போகும் என்று சொல்கிறீர்களே, அந்தக் குழந்தையைப் பள்ளியை விட்டு அனுப்பினால் மற்ற குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பார்ப்பதையோ, அலைபேசி உபயோகிப்பதையோ நிறுத்தி விடுவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
மேலும் அந்தக் குழந்தை மன உளைச்சலுக்கு ஆளாகி ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு?
ஒரு சினிமா வில் நடிக்கும் குழந்தை நட்சத்திரத்தையோ அல்லது சூப்பர் சிங்கரில் பாடும் குழந்தைகளையோ நீங்கள் இந்த மாதிரி காரணம் சொல்லி நீக்க முடியுமா?
உதாரணத்திற்கு பேபி ஷாலினி அதாவது, அஜித்குமார் அவர்களுடைய மனைவி படத்தில் நடித்தார் என்பதற்காக, அவர் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்டாரா என்ன?
இவ்வளவு ஏன்? இன்று பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் யாரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறீர்கள்? சினிமா மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களைத் தானே?
குழந்தை சரியாகப் படிக்காவிட்டாலோ, பள்ளிக்கு சரியாக வராவிட்டாலோ தாங்கள் கண்டிக்கலாமே ஒழிய பள்ளியை விட்டு நிறுத்தியிருக்கக் கூடாது.
ஒரு நல்ல ஆசிரியரின் அழகு, நல்ல சமுதாயத்தை உருவாக்குவது.
அது கண்டிப்பில் தான் வரும்.
ஆனால் இப்படி நீங்கள் இவளை நான் திருத்த மாட்டேன் என்று விலக்கிவிட்டால் நீங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்று தான் அர்த்தமாகும்.
அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு:
வணக்கம் அருமைப் பெற்றோரே!
அந்தக் குழந்தை நடித்திருந்த சில ரீல்ஸ் வெளியானது.
கசனா, கச கச கசனா என்ற பாடலுக்கு தொடை தெரிய ஒரு ட்ரவுசருடன்…
சினிமாவில் பெண்களை போதைப் பொருளாக, கவர்ச்சி பிம்பமாகக் காட்டுவது தவறு என்று ஒரு புறம் மாதர் சங்கங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, ஒன்றுமறியா எட்டு வயதுச் சிறுமியை இப்படி கவர்ச்ணி ரீதியில் ரீல்ஸ்செய்யச் சொல்லி நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
கஞ்சா போதையில் குழந்தையைக் கற்பழிக்கும் ஒரு கேடு கெட்டவனுக்கும், அந்தக் குழந்தையை இப்படி ரீல்ஸ் செய்யச்சொன்ன தர்மத்தாய்க்கும் என்ன வித்தியாசம்.
எட்டு வயதுக்குழந்தை அரை அம்மணமாக விளையாடினாலும் அதை அழகான கண்ணோட்டத்தில் பார்த்த காலம் மாறி இப்போது இதையே ஒரு கவர்ச்சிப் பாடலுக்கான ரீல்ஸாக எடுத்து சமூக வலைத்தளங்களில் அதைப் பதிவிட்ட அந்தப் பெறோர் எந்த மாதிரியான மனநிலையில் உள்ளனர்?
இதனால் என்ன பலன் ? காசு வருகிறதா?
குழந்தையைப் பச்சை எடுக்க வைப்பவர்களே இதற்குத் தேவலாம் என்று மனசு உருத்தாதா உங்களுக்கு?
பிரபலத்துவம் கிடைக்கிறதா?
இந்த சமூக ஊடகப் பிரபலத்துவமெல்லாம் ஒரு மாய பிம்பம்.
நேற்று ஒரு கோமாளி இன்று ஒரு கோமாளி
நாளை ஒரு கோமாளி
என்று நாளுக்கு நாள் இது மாறும்.
ஏன் இந்தக் குழந்தையின் விஷயத்தில் கூட முதலில் ஆசிரியரைத் திட்டித்தீர்த்து இப்போது இந்தக் குழந்தையின் பெற்றோர்களை வசைபாடுகிறார்கள்.
பாவம் இதில் பாதிக்கப்படுவது அந்தப் பிஞ்சு தான்.
பெற்றோர்களே இந்த மாய உலகினின்று நமது குழந்தைகளைப் பாதுகாப்பது நமது பொறுப்பு.
கேடுகெட்ட இந்தப் பெற்றோர்களைப் போல நமது குழந்தைகளை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்காமல், வளர்ச்சியின் பிரதிபலனாக அதிலிருந்து நல்லவைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்வில் நல்வழிப்படுத்துவது நமது கடமை.
இந்த ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த இந்த அவலம் இனி எந்தக் குழந்தைக்கும் வேண்டாம்.
சினிமாவிலும், சமூக வலைதளங்களிலும் வெல்பவன் லட்சங்களில் ஒருவன் தோற்று வாழ்க்கையை இழப்பவர்கள் மீதி பேர்
ஆனால் கற்றவர்கள் என்றுமே தோற்பதில்லை.
கல்வியை விடச் சிறந்த செல்வமேது.
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் இனி இப்படி ஒரு கோமாளித்தனம் வேண்டாம்.


